கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலரிடம் தகவல் அளித்ததாகவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கருத்துகளைக் கேட்டுத் தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக அவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் விசாரணை அதிகாரியாகச் செயல்படுவார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர். அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




