ஒடுக்கப்பட்டவர்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன்

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று! நவீனத் தமிழ்ச் சமூக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்…

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று!

நவீனத் தமிழ்ச் சமூக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் எழுப்பிய உரிமைக்குரல், வட்டமேசை மாநாடு, பூனா ஒப்பந்தம், சட்டசபை தீர்மானங்கள் போன்றவை அவரை பட்டியலின மக்களின் அரசியல் வரலாற்றின் முன்னோடியாக தலைதூக்கி நிறுத்துகிறது.

 

1860ஆம் ஆண்டு அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோழியாளத்தில் பிறந்த இரட்டைமலை சீனிவாசன் பஞ்சம், சாதிக்கொடுமை ஆகிய காரணங்களால் சிறுவயதிலே தஞ்சைக்கு இடம்பெயர்ந்தார்.

திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்ற அவர், கோவை அரசுக் கல்லூரியில் இளங்கலை படிப்பைத் தொடங்கினார்.

வெளிப்படையாகவே சாதிப் பாகுபாடு நிறைந்த அந்தச் சூழலில்தான் அவர்தம் பள்ளிக் கல்வியை தொடர நேர்ந்தது. தமிழ்நாட்டில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம்பெற்ற முதல் தலித் பட்டதாரி இரட்டைமலை சீனிவாசன்தான். இந்திய அளவிலும் அவரே முதல் தலித் பட்டதாரி.

1891ல் ‘பறையர் மகா ஜன சபை’ தொடங்கிய சீனிவாசன் அதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் தரப்பிலான கோரிக்கை விண்ணப்பம், தலையீடு, கூட்டம், தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினார். 1893ல் ‘பறையன்’ என்ற பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார்.

முதல் மூன்று மாதங்கள் மாத இதழாக வெளிவந்த அந்த இதழ், தாழ்த்தப்பட்டோரின் பேராதரவால் வார இதழாக மாறியது. 1900 வரை சொந்த அச்சகத்தில் அச்சாகி சனிக்கிழமை தோறும் வெளியான அந்த இதழுக்குத் தமிழ்நாடு கடந்தும் வாசகர்கள் இருந்தனர்.

1900களின் தொடக்கத்தில் பொருளாதாரத் தேவைக்காக தென்னாப்பிரிக்கா சென்ற இரட்டைமலை சீனிவாசன் 20 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தார். இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் மிகுதியாக வாழ்ந்த நட்டால் நகரில் வசித்த அவர் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். அப்போது அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிய மகாத்மா காந்தியுடன் பழகும் வாய்ப்பு சீனிவாசனுக்குக் கிடைத்தது.

லண்டன் வட்டமேசை மாநாட்டில் மகாத்மா காந்தியை சந்தித்துத் தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக பேசிய சீனிவாசன், இரட்டை வாக்குரிமையை எதிர்த்து எரவாடா சிறையில் காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, அம்பேத்கருடன் சென்று அவரை சந்தித்தார். காந்தி – அம்பேத்கர் இடையே கையெழுத்தான பூனா ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்டோர் சார்பாக இரட்டைமலை சீனிவாசன் கையெழுத்திட்டார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய சீனிவாசன் 1923-38 காலகட்டத்தில் சென்னை மாகாணச் சட்டமன்றத்தின் நியமன உறுப்பினராக இருந்தார். அப்போது, தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களைக் கொண்டுவந்தார்.

தீண்டாமை ஒழிப்பு, சாதிப் பாகுபாடு, ஆலய நுழைவு, நில உரிமை, இட ஒதுக்கீடு, கல்விக்கு நிதி ஒதுக்கீடு போன்றவை தொடர்பாக சீனிவாசன் முக்கியப் பங்காற்றினார்.

அரசு விடுமுறை தினங்களில் மதுக் கடை மூடல், பரம்பரை மணியக்காரர் முறை, ஆலய நுழைவு, தொழுவத்தில் குற்றவாளிகள் கட்டும் முறை ஒழிப்பு, படிப்பறிவில்லாதவர்களிடம் கைரேகைகள் பெறும் முறையில் மாற்றம் போன்ற சமூக சீர்த்திருத்தச் சட்டங்களிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ‘இராவ் சாகிப்’, ‘திவான் பகதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது. இரட்டை மலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி திரு.வி.கல்யாண சுந்தரனார், ‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

இவர் 1945 செப்டம்பர் 18ம் தேதி தனது 86வது வயதில் சென்னையில் இயற்கை எய்தினார். 15.08.2000ல் இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டு இந்திய அரசு, சிறப்பு செய்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இரட்டைமலை சீனிவாசனின் பெயர், வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.