பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டுக்கான சட்டமுன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து அறிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமுன்வடிவு குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவப்படிப்பில் வழங்கப்படுவது போலவே 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதாகக் கூறினார். தொழில்கல்வி படிப்புகளில் கிராம புற மாணவர்களின் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களோடு போட்டியிடுவதில் அரசு பள்ளி மாணவர்கள் பின் தங்குவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதோடு, 10% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஆணையம் பரிந்துரைத்ததாகவும், உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இளநிலை தொழிற்கல்வி உள் ஒதுக்கீடு சட்டமுன்வடிவை ஒரு மனதாக ஆதரிப்பதாகக் கூறினார். பெரும்பாலும் ஏழை எளிய நடுத்தர குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களே அரசுப்பள்ளியில் படிப்பதாகவும், அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
இதனையடுத்து, சட்டப்பேரவை விதிகளை தளர்த்தி சட்டமுன்வடிவை இன்றே ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். தொடர்ந்து, இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.








