புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல் முறையாக 13 திருக்குறள்களை மேற்கோள் காட்டி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமிழில் உரையாற்றினார்.
புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் துணை நிலை ஆளுநரின் உரையுடன் இன்று(26ம் தேதி) காலை தொடங்கியது. இதற்காக புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சபாநாயகர் செல்வம் பூங்கொத்து கொடுத்து தமிழிசையை பேரவைக்குள் அழைத்து சென்றார்.
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்ற திருக்குறள் உரையுடன் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக தமிழில் உரையை தொடங்கினார் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பட்டியலிட்ட தமிழிசை 13 திருக்குறள்களை மேற்கோள்காட்டி பேசினார். மேலும் அரசின் சாதனைகளை ஒவ்வொன்றாக பட்டியலிடும் போதும் உறுப்பினர்கள் பாராட்டலாம் என அவர் கூற பலமுறை உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டினர்.
தனது உரையின் போது, புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு, வளர்ச்சி மற்றும் மாநிலத்தின் அமைதி ஆகியவற்றில் சிறந்து விளங்க பாடுபடும் என நம்புவதாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் புதுச்சேரி அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்ததாக குறிப்பிட்ட அவர், இலவச அரிசித் திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் சுமார் 3.44 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் பயனடைந்துள்ளதாகக் கூறினார்.
https://twitter.com/DrTamilisaiGuv/status/1430784206846652419
சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை ரூ.33 கோடி செலவில் தூர்வாரும் பணிக்கு ஆணை வழங்கப்படுள்ளதாகக் கூறிய தமிழிசை திருக்குறளை மேற்கோள் காட்டி தனது 75 நிமிட உரையை நிறைவு செய்தார்.









