சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
அதன்படி, திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், ஆலங்குடி, ஏரியூர், சேர்க்காடு உள்ளிட்ட 10 இடங்களில் அரசு இருபாலர் கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்துப் பொறியியல் கல்லூரியினை அரசுப் பொறியியல் கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் மீண்டும் சூட்டப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
கல்லூரிகளுக்கு ஏற்கனவே வைக்கப்பட்ட பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மீண்டும் பழைய பெயர்கள் வைக்கப்படும் என கூறினார். பட்டயப்படிப்புகள் தமிழ்வழியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
பி.காம் படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கும், வணிகவியல், வணிகவியல் பயிற்சி மற்றும் கணினிப் பயன்பாடுகள் பயின்ற மாணவர்கள் பட்டயப்படிப்பில் சேரவும் வழிவகை செய்யப்படும் என்றும் உயர்கல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி செலவில் அரசு கலைக்கல்லூரிகளில் புதியதாக 10 மின்னணு நூலகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் பொன்முடி, தமிழ்வழியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ.2 கோடி செலவில் 100 பாடபுத்தகங்கள் மொழிபெயர்க்கப்படும் என தெரிவித்தார்.








