தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா வரை கடத்தி சென்ற ஆஞ்சநேயர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலியாவில் மீட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள்
கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வரதராஜ பெருமாள் சிலை, ஸ்ரீதேவி
சிலை, பூதேவி சிலை, மற்றும் ஆஞ்சநேயர் சிலை உள்ளிட்ட உலோக சிலைகள் கடந்த 2012
ஆம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாகக் கோவில் நிர்வாகிகள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ச்சியாக அப்பகுதி முழுவதும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த வழக்கானது சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதனை அடுத்துச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெளிநாடுகளில் இருக்கும்
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகளோடு இந்த நான்கு சிலையும்
ஒப்பீடு செய்து பார்த்து வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் ஆஞ்சநேயர் சிலை காட்சிக்காக வைக்கப்பட்டிருந்ததும், இந்த சிலையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவர் ஏலத்தில் பெற்றுச் சென்றது தெரிய வந்தது.
மேலும் சிலை கடத்தல் தரப்பு பிரிவு அதிகாரிகள் தொல்லியல் துறை நிபுணர்களோடு
தமிழ்நாட்டில் களவாடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும் அமெரிக்காவில் உள்ள
அருங்காட்சியகத்தில் ஏலத்தில் விடப்பட்ட சிலையும் ஒப்பீடு செய்து பார்த்த போது
இரண்டும் ஒரே சிலை என்பது தெரிய வந்தது.
உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காவல்துறை இயக்குநர் மூலமாக அமெரிக்கத் தூதரகத்திற்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதனை அடுத்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்த நபர் ஆஞ்சநேயர் சிலையை அமெரிக்க
தூதரகத்திடம் ஒப்படைத்தார்.
இதனை அடுத்து ஆஸ்திரேலியாவிலிருந்து ஆஞ்சநேயர் சிலை பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலையைப் பெற்றுக் கொண்ட தொல்லியல் துறை அதிகாரிகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.







