சென்னையில் நடக்க உள்ள ஜி 20 2-வது நிதி செயற்குழு கூட்டத்தில் விலை வாசி உயர்வு, ஆற்றல் சார்ந்த பொருட்கள் பற்றாக்குறை,சீதோஷ்ண நிலை மற்றும் பருவ நிலை மாற்றம் மூலம் வர கூடிய பொருளியல் தாக்கம் குறித்து ஆலோசனை செய்ய பட உள்ளதாக இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரர் தெரிவித்துள்ளார்.
நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் (Second Framework Working Group Meeting) சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் 20 வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இது தொடர்பாக இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்தா நாகேஸ்வர் மற்றும் பொருளாதாரங்கள் துறை இயக்குனர் ஜிதேந்திர சிங் ராஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த நாகேஸ்வரராவ், ஜி 20 நிதி தொடர்பான செயற்குழு முதல் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் சென்னையில் நாளை துவங்க உள்ளது.
அந்த கூட்டத்தில் விலை வாசி உயர்வு, சக்தி சார்ந்த பொருட்கள் பற்றாக்குறை,சீதோஷ்ண நிலை மற்றும் பருவ நிலை மாற்றம் மூலம் வர கூடிய பொருளியல் தாக்கம் குறித்தும் , இதனை மற்ற நாடுகள் எப்படி எதிர்கொண்டனர் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. பொருளாதாரம் சம்மந்தபட்ட வரன்முறைகள் குறித்தும் விவாதிக்க பட உள்ளது. தகவல் மற்றும் அனுபவ பரிமாற்றத்திற்கு மட்டுமே இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜி 20 மாநாடு மூலம் மக்கள் என்ன பயன்கள் பெற உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள ஐ ஐ டி சென்னை, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று மாலை ஐ ஐ டி மெட்ராஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஜி 20 வளர்ச்சி தேவை குறித்து கலந்துரையாட போவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக வங்கியின் மாநாட்டின் போது சர்வதேச நிதி துறை அமைச்சர்கள் சந்தித்து கொள்ள உள்ளனர். அப்போது சில கருத்துகளை முன்வைக்க இந்த மாநாடு பயன்பெறும் என்றார். மேலும், பசுமை இல்ல வாயுக்கள், சுற்றுப்புற சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்க, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். உணவு பொருட்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு அதிகமாகி வருகிறது. இதை மற்ற நாடுகள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து சர்வே எடுத்து அது தொடர்பாகவும் இந்த இரண்டு நாட்களில் ஆலோசிக்க உள்ளோம். புதைப்படிம எரிபொருள் தயாரிப்பிற்கான முதலீடுகள் மற்றும் தொகைகளை சில வங்கிகள் தர மறுப்பதாக தெரிவிக்கப்படுகிறது இதுகுறித்தும் விரிவாக ஆலோசனைக்கப்பட உள்ளது.
உணவு, ஆற்றல் பாதுகாப்பு, வானிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. உலக பொருளாதாரம், உள்ளிட்ட தலைப்புகளைக் கொண்டு இந்த கருத்தரங்கம் நடக்க உள்ளது. இந்த ஜி 20 2-வது நிதி செயற்குழு கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்து கொள்கின்றனர் என்றும் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









