குடியரசு தினவிழா: தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வாகியுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழாவில், டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின்…

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வாகியுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழாவில், டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தி மாதிரிகளை கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் சுதந்திரப் போராட்டம், 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, அணிவகுப்பில் இடம்பெறப் போகும் அலங்கார ஊர்திகளின் பட்டியலை தேர்வுக்குழு இறுதி செய்யும் என்றும் தெரிவித்திருந்தது.

மகளிர் சாதனையாளர்கள், இந்தியா-75, உள்ளிட்ட மூன்று கருத்துக்கள் அடங்கிய தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது. இதையடுத்து குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல, ஆந்திர பிரதேசம், அருணாச்சலபிரதேசம், அசாம், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம் மற்றும் யூனியன் பிரதேசங்களான டாடா நகர் ஹவேலி-டாமன், டையூ, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்களின் ஊர்திகள் தேர்வாகியுள்ளன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.