திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம், மகளிர் வெற்றிப்பயணத் திட்டம் என தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர்.
அரசின் திட்டங்கள் இடைத்தேர்தலில் எந்தமாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தெரியும். கூட்டுறவு வங்கி சங்கங்களில் கடன்தொகை வசூலிக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
முதல்வர் விஜய்யால் பொதுத்தேர்தலில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்யமுடியவில்லை தற்போது செல்கிறார். தவெக கூட்டணியில் இடம்பெறுவதும் அமைச்சரவையில் இடம்பெறுவதும் வதந்தி மட்டுமே.
தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும். தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் இருந்து மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். 8 வயது சிறுவர்கள் முதல் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார்கள். தமிழ்நாடு அரசின் வருமானத்திற்கு அரசு மாற்று வழி ஏற்படுத்தவேண்டும். பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் இருக்கமாட்டோம் என்பது விசிகவின் கருத்து என்று தெரிவித்துள்ளார்.




