இலங்கைக்கு நிவாரணம்; மத்திய அரசிடம் அனுமதி கோரி தீர்மானம்

இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப உரிய அனுமதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை மக்கள் படும்…

இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப உரிய அனுமதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை மக்கள் படும் துன்பங்கள் அனைவரது மனதிலும் சோகத்தை உண்டாக்கியுள்ளதாக தெரிவித்தார். இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்ட முதலமைச்சர், அந்நாட்டில் யார் ஆட்சியில் உள்ளனர்? அவர்கள் எத்தகையவர்கள்? என்பதைப் பார்க்காமல், அவர்களும் நம் மக்களே என அனைவருக்கும் உதவ தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளதாக கூறினார்.

அப்போது, ’பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்ற பாரதியின் வரிகளை மேற்காள்காட்டி முதலமைச்சர் பேசினார். அதன்படி, 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறிய அவர், இந்திய தூதரகம் மூலமாகவே உதவிகளை வழங்கிட முடியும் என்பதால், ஒன்றிய அரசு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அண்மைச் செய்தி: ‘பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்’

தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கை மக்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். தமிழர்கள் மனிதநேயத்திற்கு அடையாளமாக விளங்குகிறார்கள் என்பதை முதலமைச்சரின் தனித்தீர்மானம் உணர்த்துவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அனைத்து உறுப்பினர்களின் ஆதரவைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.