36 நர்சிங் மாணவிகள் விவகாரம் – பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கையை ரத்து செய்ய எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை

சண்டிகரில் 36 நர்சிங் மாணவிகள் விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட்டு, கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம்…

சண்டிகரில் 36 நர்சிங் மாணவிகள் விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட்டு, கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி அன்று பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழச்சி மாநிலம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை, சண்டிகரில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான, பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையத்தில், பிரதமர் மோடியின் 100-வது ‘மன்கீ பாத்’ நிகழ்ச்சி ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியில் படிக்கும் முதலமாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் கண்டிப்பாக இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கலந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், முதலாமாண்டில் இருந்து 28 மாணவிகளும், மூன்றாம் ஆண்டில் இருந்து எட்டு மாணவிகளும் என மொத்தம் 36 மாணவிகள் அந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு கல்லூரி விடுதியை விட்டு வெளியேறக் கூடாது என தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சண்டிகரில் 100வது ‘மன்கீ பாத்’ ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று தண்டிக்கப்பட்ட 36 நர்சிங் மாணவிகள் 7 நாட்களுக்கு விடுதியை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நீங்கள் தலையிட்டு கல்லூரியின் அந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.