உக்ரைனில் தவிக்கும் மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும் – உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வினை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ் 2 தேர்வில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் உக்ரைன் சென்று படித்த கர்நாடக மாநில மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவர்களின் ஆர்வத்தையும், பெற்றோர்களின் உணர்வையும் கொச்சைப்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட வேண்டாம் என ஒன்றிய அமைச்சர்களுக்கும்- பா.ஜ.க.ஆதரவு சமூக வலைதள பதிவர்களுக்கும் பிரதமர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வால் மருத்துவக் கல்வியானது ஏழை எளியவர்களுக்கு நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாக் கனியாக ஆகிவிடும் என்பதால் அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி இதே கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்..
மேலும், உக்ரைனில் தவிக்கும் மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும் – உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வினை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.








