இந்தியா, பாக் போட்டியை டிஜிட்டல் தளத்தில் 2.8 கோடி பேர் நேரலையில் பார்வையிட்டுள்ளனர்.
ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி கொழும்பில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து வெளியேற, அடுத்ததாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் இறங்கினர். அப்போது திடீரென மழை குறுக்கிட்டதால், ரிசர்வ் டே-யாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 24.1 ஓவரிலிருந்து ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கி விளையாடினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கே.எல்.ராகுல்100 பந்துகளில் சதமடித்து அசத்த, விராட் கோலியும் சதமடித்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை கதிகலங்கச் செய்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்தார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
இதன் பின்னர் களமிறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 32 ஓவரில் 128 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா, பாக் இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தை டிஜிட்டல் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 2.8 கோடி பேர் நேரலையில் கண்டு களித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே, இந்திய அணியின் ஒரு போட்டியை அதிக பயனாளர்கள் பார்வையிட்ட போட்டி என்ற பெருமையை இந்தியா, பாக் இடையேயான இன்றைய போட்டி பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக 2019 இல் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியே 2.52 கோடி வாடிக்கையாளர்கள் பார்வையிட்ட போட்டியாகும் இன்று அந்த சாதனையை முறியடித்து 2.8 கோடி பயனாளர்களின் இந்தியா, பாக் போட்டி பார்வையை பெற்றுள்ளது.