தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதித்துள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக மோசமாக காற்று மாசுபாடு உள்ள நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கிறது. தினசரி 80 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. ஆண்டுக்கு மாசினால் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிழந்து வருகின்றனர். இந்த சூழலில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லியில் காற்றின் தரக் குறியீடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 426 என்ற மோசமான நிலையை எட்டியது. இதையடுத்து, அரசு ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே பணி செய்யலாம் என்றும் டெல்லி மாநில அரசு உத்தரவிட்டது. அதற்கு முன்பு தொடக்கப் பள்ளிகள் அனைத்தையும் மூடுமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துவிட்டார்.
தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அனைத்து கட்டுமானப்பணிகளும் நிறுத்தப்பட்டன. மூச்சுப் பிரச்னை உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். டீசலில் இயங்கும் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காற்று மாசைத் தடுக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் புகை மாசை அகற்றும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
காற்று மாசுக்கு பிரதான காரணமாக பட்டாசுகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் பஞ்சாபில் எரிக்கப்படும் வைக்கோல் ஆகியவை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் ‘பட்டாசு கடை’ வைக்க உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.