தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் வியாபார பங்கீட்டு முறையில் நடிக்க வேண்டும், வெப் சீரிஸ்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை, திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்றால் 8 வாரங்களுக்கு ஓடிடி-யில் படத்தை வெளியிடமாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர் கடிதம் பெறுவதை நிறுத்துவது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மே 2-ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “நடிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இந்த தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியான பிறகு பரஸ்பரம் பொருத்தமான ஒரு தேதியில் இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்து தீர்மானிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் சங்கம் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வதாக தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் பேச்சுவார்த்தைக்கு வராமல் புறக்கணிக்கும் பட்சத்தில் வேலைநிறுத்தம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.




