தீவிரவாதம் தலைதூக்கினால் இரும்புகரம் கொண்டு அடக்க தயார்: அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலைத்தூக்கினால் இரும்புகரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயராக இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து பட்டாசு கழிவுகளையும், உடனடியாக அகற்றியதற்கு…

தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலைத்தூக்கினால் இரும்புகரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயராக இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து பட்டாசு கழிவுகளையும், உடனடியாக அகற்றியதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எதிர்மறை கருத்துக்கள் கொண்ட பாஜக முக்கிய தலைவர்கள் கூட சிலர் என்னை தொடர்பு கொண்டு திருச்செந்தூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். வரலாற்றில் இல்லாத வகையில் 1200 கி.மீ. அளவிற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தில் இவ்வளவு பெரிய பணி ஓராண்டில் முடியும் தருவாயில் உள்ளது என்று கூறினார்.

மேலும், ராணுவத்திற்கு நிகராக போர்க்கால அடிப்படையில் எந்த நிலையையும் சமாளிக்க சென்னை மாநகராட்சியை முதலமைச்சர் தயார்படுத்தி வைத்திருக்கிறார். பேரிடரை சமாளிக்க முதலமைச்சரின் உத்தரவில் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என இருப்பவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் இவ்வாறாக ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். அதைப்பற்றி இந்த அரசு கவலைப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் மக்கள் அமைதியாக நிம்மதியாக, ஜாதி மத இன மோதல்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தீவிரவாதம் எங்கு தலை தூக்கினாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயாராக இருக்கிறார் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.