“பாஜக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலக தயார்” – கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார்!

“அரசியலமைப்பை மாற்றுவேன் என்று நான் எப்போதாவது சொன்னால் அரசியலை விட்டு விலகுவேன்” என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்  கூறியதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இவரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, அவர் பதவி விலக வேண்டும் என கர்நாடகா முழுவதும் பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த கூற்றுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள சிவகுமார்,

“எனது அரசியல் நிலைப்பாட்டிலும், நேர்காணலிலும் உள்ள உண்மையை பாஜகவினால் ஜீரணிக்க முடியவில்லை. அரசியலமைப்பை மாற்றப் போகிறேன் என்று நான் எங்கே சொன்னேன்?. அப்படிச் சொல்லியிருந்தால் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். அரசியலமைப்பைக் கொண்டு வந்த நாங்கள்தான், அதைப் பாதுகாத்து வருகிறோம். எனது தலைவர்கள் அறிவுடையவர்கள். அவர்கள் அந்த நேர்காணலை பார்த்துள்ளனர்.

அரசியலமைப்பை மாற்றுவோம் என்று சொன்னவர்கள் பாஜக தலைவர்கள்தான். அப்படி நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று கூறியிருந்தால், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற தயார். காங்கிரஸ் தலைமையிலிருந்து என்னிடம் விளக்கம் கேட்டார்கள். நேர்காணலை விரிவாக மறுபரிசீலனை செய்யச் சொன்னேன். அதனைப் பார்த்த பின்பு நான் அப்படி எதுவும் சொல்லவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்” என தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சிவகுமார்,  முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை உள்ளடக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்றக்கூடிய “நல்ல நாள்” வரக்கூடும் என்று சிவகுமார் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார். தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வாரம் கர்நாடக சட்டப்பேரவையில் முஸ்லிம் ஒப்பந்ததாரர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி ரூ.2 கோடி வரை உள்ள சிவில் பணிகளில் 4 சதவீத ஒப்பந்தங்களையும், ரூ.1 கோடி வரையிலான சேவை / சரக்கு பணிகளில் 4% ஒப்பந்தங்களையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இச்சட்டம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து பாஜக கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சர்ச்சை பெரிதாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.