நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான தபால் வாக்கு மறு எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கும் நிலையில், அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021-ம் ஆண்டு நடைபெற்றது. தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் 370 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாகவும், எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது இதனைத்தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
தென்காசி சட்டப்பேரவை தொகுதியின் தேர்தல் அலுவலர் கோட்டாட்சியர் என்பதால் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் அதிகாரிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் தவிர வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதி ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
மறு வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டிஎஸ்பி நாகசங்கர் தலைமையில் சுமார்
300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு என்னும் மையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.







