சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, தருமபுரி, திருச்சி மருத்துவ கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதியுடன் இயங்கி வருகிறது. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்நிலையில் தலா 500 எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை , திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி என மூன்று கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் மூன்று கல்லூரிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு கல்லூரிக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், சைதாப்பேட்டை நகர்ப்புற நலவாழ்வு மருத்துவ மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு ரத்து செய்யப்பட்ட அங்கீகாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி, திருச்சி ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீசும் திரும்ப பெறப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் மாநில உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.