சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் விராட் கோலிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி எப்பொழுதும் ஆட்டக்களத்தில் மிகவும் ஆக்ரோஷத்துடன் இயங்குபவர். ஆனால் அண்மைக் காலமாக அவரின் ஆட்டம் குறித்து வைக்கப்படும் விமர்சனங்களாலோ என்னவோ மிகவும் அமைதியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ஐபிஎல் 2023 தொடரின் 24-வது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 226 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், இறுதிவரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்து வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி வீரர் ருதுராஜ் ஆட்டம் இழந்த போதும், சிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்த போதும் விராட் கோலி கத்திக் கூச்சல் போட்டு அதனை கொண்டாடி தீர்த்தார்.
இதேபோல 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து அவுட்டான விராட் கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மேக்ஸ்வெல் களமிறங்கி சிக்ஸர் அடித்தபோதெல்லாம், தன்னையே மறந்து உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தார். ஒரு முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருக்கும் விராட் கோலியின் இந்த செயல் அங்கிருந்த பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும் இதனை பார்த்த சிலர், நேர்மைறையாகவும், எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இதுபோன்ற செயல்கள் ஐபிஎல் போட்டியின் விதிமீறல்களுக்கு உட்பட்டது என்பதால், விராட் கோலியின் போட்டி கட்டண ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ, CSK – RCB அணிகளுகிடையே நடைபெற்ற போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரரான விராட் கோலி, IPL- லின் விதிமுறைகளில் ஒன்றான ஆர்டிக்கள் 2.2 விதிமுறையை மீறியிருக்கிறார். இதன் காரணமாக விராட் கோலிக்கு அவரின் போட்டி கட்டண ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









