வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவிகிதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்,
உக்ரைன் மீதான போர் காரணமாக சர்வதேச சந்தை பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவு பாதையில் இருந்தாலும், இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளதாகவும் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பெருமிதம் தெரிவித்தார்.
வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக அதிகரிப்படுவதாக தெரிவித்தார். அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில், வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாகவும் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் நீங்கள் கடன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், விரைவில் அதைச் செய்வது நல்லது. ஏனெனில் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பால் கடன்களுக்கான வட்டி விகிதம் விரைவில் அதிகரிக்கத் தொடங்கும். வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்திற்குமான வட்டி உயரவுள்ளது குறிப்பிடதக்கது.
இதனால் ஏற்கனவே கடன் வாங்கியுள்ளவர்களுக்கும் இது சோக செய்திதான். வங்கி போலவே மற்ற நிதி நிறுவனங்கள் விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கத் தொடங்கும், கடன்களுக்கான இஎம்ஐ தொகையும் உயரும் அபாயமுள்ளது.







