பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிப்பதைத் தவிர்க்க,
தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் Chennai Bus என்ற புதிய
செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்துவைத்தார். இந்த செயலியின் மூலம் சென்னை மாநகரில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “சென்னை மாநகரில் ஓடும் 3,454 மாநகர பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. Chennai Bus செயலி மூலம் பொதுமக்கள் மாநகர பேருந்துகளின் நேர விவரம், தற்போது பேருந்து எங்கு உள்ளது உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “பள்ளி மாணவர்கள் பேருந்து பட்டிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதைத் தவிர்க்க, கிராமப்புறங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் குறிப்பிட்ட அவர், மகளிருக்கான இலவச பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







