2021-2022-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ.30.307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் 596வது கூட்டம் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலைமை, உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்கள் மற்றும் சமீபத்திய புவிசார் அரசியல் முன்னேற்றங்களின் தாக்கம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 2021-2022-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக (Dividend amount) ரூ. 30 ஆயிரத்து 307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது. ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத் தொகையை வழங்கி வருகிறது. இந்த ஈவுத்தொகை என்பது, ரிசர்வ் வங்கி சந்தை நடவடிக்கைகள், முதலீடுகள், பணம் அச்சிடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதிலிருந்து கிடைக்கிற உபரித்தொகை அல்லது லாபம் இவற்றிலிருந்து மத்திய அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஈவுத்தொகையாக ரிசர்வ் வங்கி வழங்கும்.
அந்த அடிப்படையில், கடந்த 2021-2022 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக ரூ. 30 ஆயிரத்து 307 கோடி ரூபாய் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் 2020-2021 ம் நிதியாண்டிற்கான ஈவுத்தொகையாக சுமார் ரூ. 99 ஆயிரத்து 122 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிமாற்றம் செய்திருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது ஈவுத்தொகை குறைவு என்றாலும் பொருளாதார சிக்கலுக்கு இடையே இந்த தொகை மத்திய அரசுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.








