முக்கியச் செய்திகள் சினிமா

பிள்ளையோ பிள்ளையும் பேரப்பிள்ளையும்; நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

ரீ -மேக் படங்கள் தமிழ் திரை உலகிற்கு புதிதான ஒன்றல்ல, இந்த வரிசையில் சமீபத்திய வரவு அருண்ராஜா காமராஜ் இயக்கி உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி. இந்தியில் ‘ARTICLE 15’ என்ற பெயரில் வெளியான திரைப்படம். உத்தர பிரதேச மாநிலத்தில் 3 தலித் சிறுமிகளுக்கு நடைபெற்ற வன்கொடுமை, அதையொட்டிய புலனாய்வை ஒரு இளம் ஐபிஎஸ் அதிகாரி மேற்கொள்வதை கதைக் கருவாக கொண்டது. இதன் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி.

தமிழ்நாட்டுச் சூழலுக்கு தேவையான மாற்றங்களை நேர்த்தியாக செய்து சிறப்பாகவே வெளி வந்துள்ளது திரைப்படம். இருப்பினும், மிக ஆழமான ஒரு கருவை இன்னும் சில மெனக்கெடல்களோடு சில சமரசங்களை தவிர்த்து விட்டு எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர்க்க இயலவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிறப்பு அம்சங்கள்

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் நடைபெறும் சாதியக் கொடுமைகளை உள்ளடக்கியதாக கட்டமைக்கப்பட்டிருப்பதால் அந்த மொழி நடை சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த பகுதியில் சாதி பாகுபாட்டை போல், ஒவ்வொரு பிரிவினர் பேசும் தமிழில் கூட நுணுக்கமான பாகுபாடுகள் இருக்கும். அதை மிகத் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

யதார்த்தத்தில் ஒரு இளம் அதிகாரி பொறுப்பேற்கும் போது இருக்கும் ஈகோ யுத்தங்கள் முறையான காட்சி அமைப்போடு லாஜிக்கலாக பொருத்தப்பட்டுள்ளது. எந்த சாதியும் தனக்கு கீழ் ஒரு சாதி இருக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புகிறது என்பதை ஓரே காட்சியில் இயல்பான வசனங்களோடு பேசியிருப்பது அருமை. தொட்டால், பார்த்தால் தீட்டு? ஆனால், ஒடுக்கப்பட்ட பெண்ணை உடல் ரீதியில் தீண்டுவது மட்டும் தீட்டாகாதா என்கிற கேள்வி நெத்தியடி.

உயர் சாதி அடையாளத்தோடு வரும் ஆய்வாளர் மீதான நெகட்டிவிட்டி தொடக்கம் முதல் கட்டமைக்கப்பட்டாலும், இறுதியில் பெண்களுக்கு வன்கொடுமை இழைத்ததில் சாதி பாகுபாடின்றி அனைவரும் ஈடுபட்டார்கள் என்று தோலுரித்திருப்பது பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு சாதி என்பது ஒரு ஆயுதம் மட்டுமே. வன்மும் வக்கிரமும் மட்டுமே அடிப்படை என்பதை புரிய வைக்கிறது.

வட இந்தியாவிலிருந்து வரும் சிபிஐ அதிகாரி தமிழக போலீஸ்காரர் ஒருவரிடம் பெயர் கேட்பதும் அவர் தனது பெயரை மட்டும் சொல்வதும் உடன் சாதி பெயர் இல்லையா என கேட்பதும், சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டை என்ன செய்து வைத்திருக்கிறது என்பதை கெத்தாக காட்டுகிறது. அந்த போலீஸ்காரர் கொடுக்கும் தண்ணீரை கூட தொட மறுக்கும் சிபிஐ அதிகாரியின் செயல் இன்னமும் வட இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தின் தேவை எவ்வளவு உள்ளது என்பதை உணர்த்துகிறது.

சிபிஐ அதிகாரிக்கும் உதயநிதிக்குமான இந்தி தொடர்பான உரையாடல் சமகால அரசியலை பேசுகிறது. அதிலும் ஆணவக் கொலை என்று உதயநிதி சொல்ல, அதை கௌரவ கொலை என சிபிஐ அதிகாரி சொல்வது நுணுக்கமான அரசியல் நகர்வு. இயல்பான மொழி நடையில் ஆணை அவர், அவன் என்பதும், பெண்ணை அவள், அது என்பதும் நியாயப்படுத்தப்பட்ட சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களை உயர்சாதி ஆய்வாளர் அது என்று கூறுவதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வது என்பது அடக்குமுறை எதுவாகினும் அதன் கருவியாக மொழி எப்படி பயன்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

மெருகேற்றியிருக்கலாம்

தமிழ்நாட்டில் இன்னமும் 194 வகையான தீண்டாமை கொடுமைகள் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், திரைப்படத்தில் அது மிக மேலோட்டமாகவே கையாளப்பட்டுள்ளது. பன்ச் வசனங்கள் என்பதை விட மிக மிக முக்கியமான அரசியல் உரையாடல்களை எழுப்பும் வசனங்களுக்கு உதயநிதி கொஞ்சம் நன்றாகவே நடிக்க முயற்சித்திருக்கலாம்.

ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து வந்த இளைஞர் என்பதால் உதயநிதிக்கு ஆங்கில வசனங்கள் வைத்திருப்பது ஒகேதான். ஆனால், அது அவ்வளவாக உதயநிதிக்கு பொருந்தவில்லை. GET THE……OUT OF HERE என்று உதயநிதி பேசுவதும் அதை உதவி ஆய்வாளர் அந்தஸ்த்தில் இருக்கும் ஒரு அதிகாரி புரிந்து கொள்ளாமல் இருப்பதும் உறுத்தலாகவே உள்ளது. அதுவும் அந்த அதிகாரியை ஒடுக்கப்பட்ட பிரிவினராக காட்டுவதால் இந்த SO CALLED நகைச்சுவையை தவிர்த்திருக்கலாம்.

தொடக்கத்தில் சாதி பாகுபாட்டிற்காக காட்டப்படும் டீக்கடையிலேயே இறுதியில் அனைவரும் அமர்ந்து டீ சாப்பிடும் காட்சி அருமை என்றாலும் இறுதியில் அங்கு வழங்கப்பட்டது பேப்பர் கப் டீ தான். உண்மையில் கிராமங்களில் பேப்பர் கப் கொண்டு வரப்பட்டதே இரட்டை டம்ளர் முறையின் ஒரு வடிவம்தான். அந்த இடத்தில் சற்று யோசித்து கண்ணாடி டம்ளரில் அனைவரும் டீ குடிப்பது போல் வைத்திருக்கலாம். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15 என்ன சொல்கிறது என்பதை ஒரு காட்சியில் மட்டுமே காட்டியிருப்பதை அதிகப்படுத்தியிருக்கலாம்.

நெஞ்சுக்கு நீதி

இந்தியாவிலேயே முதன்முறையாக சாதி அடக்குமுறைக்கு எதிராக தத்துவார்த்த இயக்கம் ஒன்று உருவாகி அது அரசியல் இயக்கமாக மாறிய வரலாறு தமிழ்நாட்டுக்கே உண்டு. அந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றின் முக்கிய நாயகரான முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சுய சரிதை நெஞ்சுக்கு நீதி அந்த பெயரை தாங்கி அவர் பேரன் நடித்திருக்கும் திரைப்படம் கூட சாதி கொடுமை ஒழிப்புக்காக பேச வேண்டிய சூழலில் இருப்பது சாதி ஒழிப்பு முனைப்புகள் இன்னமும் எவ்வளவு வேகம் எடுக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.

பிள்ளையோ பிள்ளை

எம்ஜிஆருக்கு போட்டியாக தனது மகன் மு.க.முத்துவை பிள்ளையோ பிள்ளை திரைப்படத்தின் மூலம் கருணாநிதி களம் இறக்கினார் என்று வரலாறு சொல்கிறது. ஆனால், அவரது முயற்சி பெரிய அளவில் கை கூடவில்லை. தான் சாதித்த அளவு திரை துறையில் தனது வாரிசுகள் சாதிக்கவில்லை என்கிற கவலை கலைஞருக்கு எப்போதும் இருந்திருப்பதை அவரே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். கலைஞர் இருந்த போதே உதயநிதி திரைத்துறைக்கு வந்துவிட்டாலும் இவ்வளவு காத்திரமான அரசியல் படத்தில் உதயநிதி நடித்திருப்பது இதுவே முதன்முறை.
தன் வாழ்நாள் முழுவதும் கலைஞர் எதையெல்லாம் பேசினாரோ, எழுதினாரோ, சட்டமாக கொண்டு வந்தாரோ, அதைத் தான் இன்று அவரது பேரன் உதயநிதி நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மூலம் காட்டியிருக்கிறார்.

ஒரு அரசியல் தலைவர் தனது வாழ்க்கை குறிப்பை டைரி குறிப்பு போன்று தினமும் எழுதி அதை 6 பாகங்களாக வெளியிட்ட வரலாறு கலைஞருக்கு மட்டுமே உண்டு. கலைஞரின் நெஞ்சுக்கு நெருக்கமான ஒன்று அவர் எழுதிய சுயசரிதையான நெஞ்சுக்கு நீதி அந்த கலைஞர் இன்று இருந்து நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? பிள்ளையோ பிள்ளையில் விட்டதை பேர பிள்ளை தொடங்கிவிட்டான் என்று சொல்லியிருப்பாரோ?

– கண்ணம்மா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை

EZHILARASAN D

100 கோடி தடுப்பூசி; இலக்கை கடக்கிறது இந்தியா

Halley Karthik

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி!