ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ‘சர் ஸ்காட்’ என்ற ஆங்கிலேயர் கதாபத்திரத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார்.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் இதுவாகும்.
இதனை தொடர்ந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. மேலும்இந்த பாடல் ஆஸ்கர் மேடையில் பாடப்பட்டு பிரம்மாண்டமான நடனக் குழு நடனமாடியது.
இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் ‘சர் ஸ்காட்’ என்ற ஆங்கிலேயர் கதாபத்திரத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் திடீரென காலமானார். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்திருந்த நடிகர் ரே ஸ்டீவன்சனின் எதிர்மறையான பாத்திரமும், அவரின் நடிப்பும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் மார்வெலின் ‘தோர்’, பிரபல வெப் சீரிஸான ‘வைக்கிங்ஸ்’ போன்றவற்றிலும் நடித்துள்ளார்.
வடக்கு அயர்லாந்தின் லிஸ்பர்னில் பிறந்த ரே ஸ்டீவன்சன் 90களின் முற்பகுதியில் ஐரோப்பிய தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டெலிஃபிலிம்களில் நடித்ததன் மூலம் சினிமா வாழ்க்கை துவங்கினார். இவரின் மறைவுக்கு ஆர்ஆர்ஆர் படக்குழு “ நீங்கள் என்றென்றும் எங்கள் இதயங்களில் நீங்காமல் நிலைத்திருப்பீர்கள்” என தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் ”நடிகர் ’ரே ஸ்டீவன்சன்’ மறைந்ததை என்னால் நம்பமுடியவில்லை. ஆர்ஆர்ஆர் படபிடிப்பின் போது அதிக துடிப்போடும் உத்வேகத்தோடும் தனது செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.







