2,000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம் எனவும் அப்படி மாற்ற வங்கிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. 2016 – 2017ம் நிதியாண்டில் 354 கோடியே 29 லட்சம் அளவிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
2019-20ம் நிதியாண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது. 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 3.62 லட்சம் கோடியாக குறைந்தது.
2023ம் ஆண்டு மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதன்படி இன்று முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம். நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், வங்கிகளுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்ற செல்லும் மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







