நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, பரபரப்பான ஆட்டத்தில் டிராவில் முடிவடைந்தது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கான்பூரில் நடந்து வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் சேர்த்தது அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால், இந்திய அணி 283 ரன்கள் முன்னிலை வகித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் யங் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். கடைசி நாளான இன்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. நியூசிலாந்து அணியின் டாம் லாதம்- சோமர்விலே ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் கடுமையாக போராடினர். கடைசியில் உமேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், சோமர்விலே. அவர் 36 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து கேப்டன் வில்லியம்சன் வந்தார். இதற்கிடையே அரை சதத்தை பூர்த்தி செய்த டாம் லாதத்தை அஸ்வின் அசத்தலாக போல்டாக்கினார். அவர் 52 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
வில்லியம்சன் நிலையாக நின்றும் 24 ரன்னில் அவுட் ஆக்கினார் ஜடேஜா. பின்னர் வந்தவர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் வெற்றி இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. 9 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது நியூசிலாந்து அணி. இந்நிலையில் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் ரச்சின் ரவிந்தராவும் அஜாஸ் படேலும் கடைசிவரை விக்கெட்டை விட்டுவிடாமல் போராடி, போட்டியை டிரா செய்தனர். ஒரு விக்கெட்டை எடுக்க முடியாததால், இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. நியூலாந்து அணி 2 வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.