நாட்டின் இளம் பஞ்சாயத்து தலைவரான ரேஷ்மாவுக்கு திருமணம் நடக்க இருக் கிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்ட மாவட்டத்தில் உள்ள அருவப்புலம் (Aruvappulam) கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா மரியம் ராய். கடந்த ஆண்டு அங்கு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட ரேஷ்மா, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 21 வயது 42 நாட்களில் பஞ்சாயத்துக்கு தலைவராகி சாதனை படைத்தார்.
மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர்தான், நாட்டின் இளம் பஞ்சாயத்து தலைவர் என அப்போது கூறப்பட்டது. இந்நிலையில், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் வர்கீஸ் பேபி என்பவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. ஒரே கட்சியை சேர்ந்த இவர்கள், திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டிசம்பர் 26 ஆம் தேதி பிரமடம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.
இதுபற்றி பேசிய ரேஷ்மா, இது காதல் திருமணம் மாதிரிதான். நாங்கள் முதலில் பேசி பிறகு குடும்பத்தில் தெரிவித்தோம். அவர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருப்பதாகத் தெரிவித்தார்.









