ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலம் முழுவதும் உள்ள 34,773 நியாய விலைக் கடைகளில் 33,377 நியாய விலைக் கடைகள் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் 2,02,45,357 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றில் கிராமப் பகுதிகளில் 16,994 முழுநேரக் கடைகளும், நகர்ப்புறங்களில் 6,942 கடைகளும் ஆக மொத்தம் 23,936 நியாய விலைக் கடைகள் முழு நேரக் கடைகளாக இயங்கி வருகின்றன.
மாநிலம் முழுவதும், 9,441 பகுதி நேரக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கிராமப் புறத்தில் 8,721 கடைகளும் நகர்ப் புறங்களில் 720 கடைகளும் இயங்கி வருகின்றன.
இவை தவிர மலைப் பகுதிகள் வனப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளற்ற பகுதிகளில் 3,556 நகரும் நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில், பரீட்சார்த்த முறையில் IOC யின் 5 கிகி| 2கிகி சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாய விலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் Google Pay, Paytm போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்று அந்த அறிக்கையில் அமைச்சர் ஐ. பெரியசாமி குறிப்பிட்டுள்ளார்.








