ரேஷன் அரிசி கடத்தலை தவிர்க்க அண்டை மாநில அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
குடிமைப்பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வு துறை அழுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி துவக்க விழாவானது உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து பொது விநியோகத் திட்டத்தில் வழங்கும் அரிசி கடத்தப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். அரிசி கடத்தல் வாகனங்களில் சிக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளை விட தற்போது அரிசி கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அரிசி கடத்தலில் கடந்த ஆட்சியில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஒரு வருடத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற இடங்களில் தடுப்பு காவல் பிரிவு மூலம் கண்காணிக்கப்பட்டு கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. அரிசி கடத்தலைத் தடுப்பதற்கு அதிகாரிகள் தினந்தோறும் பணியாற்றி வருகிறார்கள். மாநில எல்லைகளில் CCTV கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க படுகிறது. நேரடி கொள்முதல் நிலையத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட எல்லைகளில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்களோடு இணைந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் அறிவுறுத்தியுள்ளோம். நியாயவிலைக் கடை, குடோன்கள் போன்ற இடங்களில் இருந்து அரிசி கடத்தப்படுகிறது.
சாக்குப் பைகளில் சீல் வைத்து எங்கிருந்து கடத்தப்படுகிறது என்பதை கண்டறிய திட்டமிட்டுள்ளோம். பயோமெட்ரிக் பயன்பட்டால் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை . ரேஷன் கடைகளில் தேவைபடுகிறவர்கள் மட்டும் அரிசி வாங்குகிறார்கள்.
கிறிஸ்டி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டாண்டு காலமாக என்னென்ன டெண்டர் நடந்தது என்கிற விபரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையுடன் கொடுத்துள்ளோம்.
கோதுமைக்கு பதில் அரிசி 22 ஆயிரம் டன் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்கப்படும். அனைத்து குடோனுக்கும் code system கொண்டு வர இருக்கிறோம். இதன் மூலம் அரிசி எங்கு இருந்து கடத்தப்படுகிறது என்று தெரியவரும்.
பயோ மெட்ரிக் முறை கொண்டு வந்ததில் இருந்து என்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது தெரிய வருகிறது. இதனால் கடத்தல் என்பது குறைந்து வருகிறது. ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து எந்த குற்றச்சாட்டு இருந்தாலும் சொல்லலாம். அண்டை மாநிலங்களுக்கு அரிசி கடத்தப்படுவதாக சொல்லுகிறார்கள். இதனால் அண்டை மாநில அதிகாரிகளோடு எங்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.







