எதற்கும் துணிந்தவனை தொடர்ந்து, பாலா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. நந்தா, பிதாமகனை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து பாலாவும் சூர்யாவும் கைகோர்கிறார்கள். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படாததால் சூர்யா 41 என்று அழைக்கப்படுகிறது. இத்துடன் வெற்றிமாறன் இயக்கதில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படமும் பரபரப்பாக தயாராகி வருகிறது. இந்நிலையில், வாடிவாசல் படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து சூர்யா கோபமாக வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
தொடர் தோல்விகளை தொடர்ந்து சூரரைப்போற்று, ஜெய்பீம் என இரண்டும் மெகா வெற்றிப்படங்களை கொடுத்தார் சூர்யா. இரண்டுமே கொரோனா உள்ளிட்ட பல சிக்கல்களால் OTT-யில் தான் வெளியிடமுடிந்தது. பொதுவாகவே மாஸ் ஹீரோக்களுக்கு திரையரங்கில் ரசிகர்களின் விசில் பறக்க, பொதுமக்கள் ஆர்பரிக்க தங்களின் படங்கள் கொண்டாடப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கும். தொடர்ந்து திரையரங்கில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் எதிர்பார்த்த அளவு வரவேற்பை மக்களிடம் பெறவில்லை.
ஆக, தரமான ஒரு படத்தின் மூலம் திரையரங்கில் வந்து தெறிக்கவிடும் முயற்சியில் புயல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார் சூர்யா. பொதுவாகவே இயக்குநர் பாலா படங்கள் என்றாலே நடிகர்களை படாதபாடு படுத்தி ஒரு வழிக்கு கொண்டுவந்து விடுவார் என்பதே பரவலான கருத்து. யதார்த்தமான கதைகளை தேர்வு செய்யும் பாலா, அதில் வரும் நடிகர்களை ராவாக காண்பிக்கும் முயற்சியில் நடிகர்களிடம் பெரும் மெனக்கெடல்களை கோருவார். படத்தின் துணைக் கதாப்பாத்திரங்கள் கூட விசித்திரமான கெட்டப்புகள், சிகை அலங்காரங்கள் என பாலாவின் கைங்கர்யத்தால் முற்றிலும் புதிய அவதாரங்களை எடுப்பார்கள். எனவே, பாலாவின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து, முடியும் வரைக்கும் வேற படங்களுகளில் அவர்கள் பணியாற்ற முடியாத சூழல் உருவாகிவிடும். துணை நடிகர்களுக்கே அப்படி என்றால் படத்தின் ஹீரோ ஹீரோயின்களின் நிலையை யோசித்து பாருங்கள்!
வாடிவாசல் படப்பிடிப்புக்கு மத்தியில் பாலா இயக்கும் படத்திலும் மும்முரமாக நடித்துக்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாது லோகி-கமலின் விக்ரம் படத்திலும் சிறிய வேடத்தில் நடிக்கிறார். சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்-ஐயும் சூர்யாவே மேற்கொண்டுவருகிறார். இத்தனை வேலைகளுக்கு நடுவே உச்சி வெயிலில் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் பாலா சூர்யாவை வருத்தெடுப்பதாக செய்திகள் வெளியாயின. இதனால் விரக்தியடைந்த சூர்யா பாலாவிடம் சொல்லிக்கொள்ளாமலே படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறினார் என்று செய்திகள் பரவின.
இதுகுறித்து, படத்தை தயாரிக்கும் சூர்யாவின் 2d entertainment நிறுவனம் சார்பாக ட்விட்டரில் ஒரு பதிவு போடப்பட்டிருந்தது. அதில் பாலா இயக்கும் சூர்யாவின் படத்தின் முதல் படப்பிடிப்பு schedule வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும் விரைவில் கோவாவில் அடுத்த schedule தொடங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்துமே கூட பாலா – சூர்யாவுக்கு இடையே கடுமையான மோதல் நடந்துள்ளது எனவும் இதற்கு மேல் அப்படத்தின் வேலைகள் தொடரப்படாது எனவும் செய்திகள் பரவின.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் சூர்யாவே தன்னுடைய ட்விட்டர் பக்கதில் ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளார். சூர்யா41 படப்பிடிப்பு தளத்தில் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார். மீண்டும் சூர்யா41 படப்பிடிப்புக்கு செல்ல காத்துக்கொண்டிருக்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கப்படும் என சூர்யா வெளிப்படுத்தியுள்ளதாக புரிந்துகொள்ளமுடிகிறது. இருப்பினும் பாலாவுக்கு, சூர்யாவுக்கும் எதோ மனக்கசப்பு உருவாகிவிட்டதவும் உணரமுடிகிறது என சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.







