ராணி 2-ம் எலிசபெத் இறுதி ஊர்வலத்தில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் கருப்பு நிற ராணுவ உடைகளை அணிந்து கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, லட்சகணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராணியின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. ராணியின் உடல் அரசு மற்றும் அரச மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேவிற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மன்னர் சார்லஸ் உட்பட அரச குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கருப்பு ராணுவ உடையில் காணப்பட்டனர். இந்த நாளில் அரச குடும்பத்தினர் எந்த உடை அணியவேண்டும் என்று இங்கிலாந்தில் விதிகள் உள்ளனவாம். புதிய மன்னர் சார்லஸ் பதக்கங்களுடன் கூடிய சடங்கு சீருடையை இன்று நாள் முழுவதும் அணிந்திருக்க வேண்டும்.
கடந்த 2012-ம் ஆண்டு ராணி அவருக்கு வழங்கிய சிவப்பு வெல்வெட் மற்றும் தங்க பீல்ட் மார்ஷல் கோலை எடுத்துச் செல்லவேண்டும். மேலும் ராணி எலிசபெத்தின் அனைத்து பிள்ளைகளும் ராணுவ உடைகளையே அணிந்து இருக்க வேண்டும். பேரன் இளவரசர் வில்லியமும் ராணுவ உடையை அணிந்து இருந்தார். அரச குடும்பத்தில் உள்ள ஆண்கள் கருப்பு ராணுவ சீருடைகளையும், பதவியில் இல்லாதவர்கள் கருப்பு கோர்ட்டுகளையும் அணிந்திருந்தனர். இளவரசர் ஹாரி பதவியில் இல்லை என்பதால் சாதாரண கருப்பு நிற கோர்ட்டை அணிந்திருந்தார்.
அதேபோல இறுதி சடங்கில் பங்கேற்ற பெரும்பாலான தலைவர்கள் தங்கள் துக்கத்தை வெளிக்காட்டும் வகையில் கருப்பு ஆடைகளையே அணிந்து இருந்தனர். கடந்த ஆண்டு ராணி எலிசபெத்தின் கணவர் அரசர் பிலிப் இறந்த போதும் இதேபோன்ற உடைகள் தான் அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-இரா.நம்பிராஜன்









