தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!!

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள எல்லையோர மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  ரமலான் பெருநாள் வரும் மாதமே, இஸ்லாத்தில் சிறந்த மாதமாக…

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள எல்லையோர மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

ரமலான் பெருநாள் வரும் மாதமே, இஸ்லாத்தில் சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்கவாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்களால் கருதப்படுகிறது. அதனால்தான் இஸ்லாமியர்கள் இந்த மாதம் முழுவதும் நோன்பிருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

வளைகுடா நாடுகளிலும், இந்தியாவில் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கேரள மாநில எல்லையோர மாவட்டங்களிலும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இடலாக்குடியில் உள்ள அல் மஸ்ஜித் அஸ்ரப் பள்ளிவாசல் முன்பு திரளான இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

கோவையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது. கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் புத்தாடை அணிந்து கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டி ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

மேலும், நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்ஹா கடற்கரையில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற தொழுகையில், உலக அமைதி வேண்டியும், நாட்டுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் துஆ செய்தனர். இந்த சிறப்பு தொழுகையில் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று, மனமுருகி வேண்டிக்கொண்டதோடு, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இதே போல் மதுரை தமுக்கம் மைதானம், திருமங்கலம், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர் கலந்து கொண்டு சிறப்பு தொழகையில் ஈடுபட்டார். தொழுகையை முடித்து உலக நன்மை வேண்டியும், மழை பொய்ய வேண்டியும் உலக அமைதி நிலவ வேண்டும் என்றும் துஆ செய்தனர்.

இந்த தொழுகையில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, புத்தாடை அணிந்து, ஒருவரை ஒருவர் கட்டி ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, ரம்ஜான் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.