இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இன்று (நவம்பர் 14) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

“மத்திய அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக, நேற்று (நவம்பர் 13) காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் நிலவியது.

புயலாக வலுப்பெற வாய்ப்பு!

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நவம்பர் 16ஆம் தேதி மாலை மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் தாழ்வுப் பாதை!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியில் இருந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இன்று எந்தெந்த பகுதிகளில் மழை?

இன்று (நவம்பர் 14) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.