இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம், தேர்போகிகிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் தலைமைக் காவலர் மகேஷ்குமார் என்பவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், உயிரிழந்த மகேஷ் குமார் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இராமநாதபுரம் மணல் மாவட்டம், தேவிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (15.6.2026) அதிகாலையில் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்து தேவிப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தலைமைக் காவலர் திரு. எம். மகேஷ்குமார் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தபோது இராமநாதபுரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் பின்பக்கத்தில் மோதியதில் தலைமைக் காவலர் திரு.எம். மகேஷ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
தலைமைக் காவலர் திரு. எம். மகேஷ்குமார் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.எம். மகேஷ்குமார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. அவரது குடும்பத்தினருக்கு 30 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




