ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரம் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த நபர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கடற்கரையோர மணலில் மனித உடல், கால், கை, தலை உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்பு பாகங்களின் எலும்புக் கூடுகள் புதைந்திருந்தன.

அவ்வப்போது வீசும் சூறாவளிக் காற்றால் எலும்புக் கூடுகள் வெளியில் தெரிந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வாலிநோக்கம் காவல் நிலைய போலீசார் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து எலும்புக் கூடுகளை தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யாரையேனும் கொலை செய்து புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகளா அல்லது நரபலி கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







