ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

ஓபிசி கிரீமிலேயர் வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயைக் கணக்கிடும் போது…

ஓபிசி கிரீமிலேயர் வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என
மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயைக் கணக்கிடும் போது ஊதியத்தை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று 1993ஆம் ஆண்டில் அப்போதைய நரசிம்மராவ் அரசு தீர்மானித்ததற்கு, சமூகநீதியை பின்னணியாகக் கொண்ட பல காரணங்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றின் நோக்கங்களுக்கு எதிரான வகையில், ஊதியமும் கணக்கில் சேர்க்கப்பட்டால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.67,000 இருந்தால் அக்குடும்பத்தின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு விடும். இதைவிட மோசமான சமூக அநீதி எதுவும் இருக்க முடியாது என்ற ராமதாஸ், எனவே, கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயை கணக்கிடும் முறையை மறு ஆய்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஊதியம் தவிர்த்த பிற ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் மட்டுமே கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயை கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்றொருபுறம், கிரீமிலேயர் வரம்பு உடனடியாக உயர்த்தப்பட வேண்டும். கிரீமிலேயர் வரம்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட வேண்டும். ஆனால், 2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்தி, சமூகநீதியைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.