ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிய இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமர் பாலம் விவகாரத்தை மத்திய அரசு கவனமாக பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாதிட்ட மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்போம் என மத்திய அரசு உறுதியளித்ததாகவும், தற்போது இழுத்தடிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த அமைச்சரையோ, அதிகாரியையோ பார்க்க விரும்பவில்லை எனக்கூறிய அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ராமர் பாலம் விவகாரம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராமர் பாலம் தொடர்பான இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டனர். அதே வேளையில், இந்த விவகாரத்தில் மனுதாரர் ஏதேனும் நிவாரணம் கோர விரும்பினால் நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் எனவும் அறிவுறுத்தினர்.








