காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக யாருக்கு வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் திமுக 4, அதிமுக 2 மாநிலங்களவை உறுப்பினர்களை பெற முடியும். 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஓர் இடம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் அந்த ஓர் இடம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அலையடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி என இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து கூர்மையான வாதங்களை முன்வைக்கும் காங்கிரஸ் முன்னோடிகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முக்கியமானவர். 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரின் பதவிக்காலம் வரும் ஜூலை 4ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. சிதம்பரம் தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு செல்வதையே விரும்புகிறார்.
அதே சமயம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பில் இருந்து செயல்பட்டு வருகிறார் கே.எஸ்.அழகிரி. இவரது தலைமையில் மக்களவைத் தேர்தலில் 8 இடங்களிலும், சட்டமன்றத் தேர்தலில் 18 இடங்களிலும் காங்கிரஸ் வென்றது. 3 வருடங்களுக்கு மேலாக தலைவராக இருந்த நிலையில், தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை கே.எஸ்.அழகிரி எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பது வெகு விரைவில் தெரிந்துவிடும் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரங்களில்.
Advertisement: