தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார். காலியாக உள்ள அவரது பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராக பதவி வகித்துள்ள அப்துல்லா, தற்போது திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் அணி இணைச் செயலாளராக இருக்கிறார்.
சட்டமன்றத்தில் திமுகவுக்கு 133 உறுப்பினர்களும் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தால் 159 உறுப்பினர்கள் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கும். இதனால் திமுக வேட்பாளர் அப்துல்லா வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.







