உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு மறுசீரமைக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) மற்றும் தேர்தல் ஆணையர்களை (இசி) நியமிக்கும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை விலக்கி வைக்கும் சட்டத்தை மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளது.
நாட்டின் அதிகாரம் மிக்க தேர்தல் ஆணையத்தின் ஆணையர்கள் மத்திய அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் ஆளும் அரசுக்கு சார்பாக நடத்தப்படுவதாக அவ்வப்போது எதிர்க்கட்சிகளால் விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.
இப்படி அவ்வப்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமனத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் அரசியல் சாசன அமர்வு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய 3 பேரைக் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத்தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு மறுசீரமைக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) மற்றும் தேர்தல் ஆணையர்களை (இசி) நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை (சிஜேஐ) விலக்கி வைக்கும் சட்டத்தை மத்திய அரசு மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்துள்ளது.







