ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்குவதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் அரவணைப்பின்றி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்த அம்மா உணவகங்களின் தற்போதய நிலை குறித்து சென்னை மாநகர் முழுவதும் நமது நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் ஷெர்லி நடத்திய கள ஆய்வை தற்போது பார்க்கலாம்…
இந்திய அளவில் அனைத்து மாநில ஆளுமைகளின் கணவனத்தையும் ஈர்த்த திட்டம் என்றால் அது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற அம்மா உணவகம் தான். இந்த திட்டத்தை மலிவு விலை உணவக திட்டம் என்று அழைப்பதை விட சமூக நீதி திட்டம் என்று தான் அழைக்க வேண்டும். ஏனென்றால் ஏழைகள், கூலி வேலை பார்ப்பவர்கள் மட்டுமின்றி திரையுலக கனவோடும், வேலைதேடியும் சென்னை நோக்கி வரும் ஏராளமான இளைஞர்கள் தொடங்கி பல இடங்களில் ஐடி பணியாளர்கள் வரை எல்லோருக்கும் சமமாக குறைந்த விலையில் உணவு வழங்கும் இந்த திட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது.
அந்த அளவிகுற்கு லட்சக்கணக்கானவர்களின் பசியை போக்கிய இந்த திட்டம் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் 2013 மார்ச் 19 அன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மலிவு விலை உணவகம் என்ற பெயரில் காலை உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் மதியம், இரவு உணவு என ஏழைகள், உழைப்பாளிகள் குறைந்த விலையில் பசி தீர்க்கும் ஒன்றாக மாறியது. இதனால் இந்த திட்டம் ஏழை, எளியவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.
2013ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் 127 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்ட நிலையில், அது மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அது சென்னையிலேயே 402 உயர்ந்தது. பின்னர் மற்ற மாநகராட்சிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்த முடிவு செய்து, திருப்பூர் மாநகரில் 10 அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம் அங்கு பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தொடங்கி பலரும் பசியாறினர்.
அந்த அளவிற்கு தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து உயர் அதிகாரிங்கள், அமைச்சகர்கள் என பலர் தமிழ்நாட்டிற்கு வந்து, இந்த திட்டம் பற்றிய விவரங்களை கேட்டறிந்து, பின்னர் இந்த திட்டத்தை தங்கள் மாநில மக்களுக்காக செயல்படுத்தினார்கள். குறிப்பாக ஆந்திரா, ராஜஸ்தானில் இந்த மலிவு விலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இப்படி பெருமளவுக்கு மக்கள் வரவேற்பு பெற்ற திட்டமான இந்த அம்மா உணவகம்., 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்த திட்டம் நிச்சயம் செயல்பாட்டில் இருக்காது. திமுகவினர் இழுத்து மூடி விடுவார்கள் என்ற விமர்சனங்கள் முன்வைக்கபட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி செயல்பட்டும் வருகிறது.
ஆனால், வெறும் பெயரளவில் மட்டுமே இந்த திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறதோ என்ற விமர்சனம் எழுந்துள்ளது. காரணம் சென்னையில் இயக்கப்படும் 402 அம்மா உணவகங்களில், பல உணவகங்களிலிருந்து மிகவும் குறைவான அளவில் மட்டுமே வருவாய் வருவதால், அதனை சரியாக பராமரிக்க முடியவில்லை என்று மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்குவதற்காக தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் அரவணைப்பின்றி கிடப்பதாகவும், மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்த இந்த அம்மா உணவகங்களின் தற்போதய நிலை குறித்து சென்னை மாநகர் முழுவதும் நமது நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் ஷெர்லி நடத்திய கள ஆய்வில் மக்கள் பல்வேறு கருத்துகளை முன் வைத்தனர்.
சென்னையில், கேகே நகர், கோடம்பாக்கம், பிராட்வே, புரசைவாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இயக்கப்படும் அம்மா உணவகங்களில் பராமரிப்பு போதாது எனவும், மிகவும் மோசமான நிலையில் தான் உணவகங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அங்கு உணவருந்த வரும் மக்கள் குற்றம்சாட்டினர்.
இன்றும் கையில் பணமில்லாமல் பசியோடு இருக்கும் ஏராளமானோர் இந்த உணவகங்களைத் தான் நாடி செல்கின்றனர். சரியான பராமரிப்போடு நடத்தப்பட்டால் நிச்சயம் மக்கள் இன்னும் அதிகமாக அம்மா உணவன்களை தேடி வருவார்கள். உணவின் சுவை மாறாமல் குறைந்த விலையில் உணவளிக்கும் இந்த அம்மா உணவங்களை மீட்டெடுக்க அரசு முன் வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக நமது செய்தியாளர் ஷெர்லி நடத்திய களஆய்வை முழுமையாக காண….
- பி.ஜேம்ஸ் லிசா










