’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ராணுவத்தை நவீனமயமாக்க 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
பாதுகாப்புப் படைக்குத் தேவையான ஆயுத கொள்முதல் செய்வதற்கான அமைப்பின் கூட்டம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராணுவத்தை நவீனமயமாக்கவும் பாதுகாப்பு படைகளுக்குத் தேவையான நவீன ஆயுதங்களுக்காவும், 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட இருக்கின்றன. இதன்படி, இந்திய ராணுவத்திற்கு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 12 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட இருக்கின்றன. மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனத்திடம் இருந்து கடற்படை போர்க்கப்பல்களுக்கான நவீன கண்காணிப்பு கருவிகள் , கடற்படை திறனை அதிகரிப்பதற்காக டோர்னியர் விமானங்கள், பெல் நிறுவனம் தயாரிக்கும், மேம்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.








