டி-20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய இந்திய வீரர்களுக்கு திடீரென என்ன ஆனதோ தெரியவில்லை. முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய வீரர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏமாற்றம் அளித்தனர். அந்த அணியின் நேர்த்தியான பந்துவீச்சில், மொத்தமாக நிலை குலைந்தது, இந்திய அணி. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பியதால், கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது, இந்திய அணி.
அந்தப் போட்டியில்தான் அப்படி என்றால், அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலாவது அதிரடி வெற்றி பெறும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம். இந்தப் போட்டியில், ‘எல்லாத்தையும் பின்னால வர்றவன் பார்த்துப்பான்’ என்கிற ரீதியிலேயே பேட்ஸ்மேன்கள் நடையை கட்டினர்.
முதல் போட்டி தோல்வி காரணமாக, இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோகித் சர்மாவை மூன்றாவது வீரராக களமிறக்கினர். அந்த முயற்சியில் கை கொடுக்கவில்லை. தவறான ஷாட்களை ஆடி, ஆட்டமிழந்ததைப் பார்த்து, முன்னாள் வீரர்களே கொதித்துவிட்டனர். கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் விராத் கோலி, ’நாங்க துணிச்சலோடு விளையாட வில்லை’ என்று அதிர்ச்சி குண்டு போட்டார். பந்துவீச்சாளர் பும்ரா, ’எங்களுக்கு ஓய்வு தேவை’ என்றார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த அணி, திடீரென ஆட்டம் கண்டதற்கு என்ன காரணம் என்று தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறான் ரசிகன்.
இதற்கிடையில், இந்திய அணி அபுதாபியில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது . இந்திய அணி துணிச்சல் பெற்று, இந்தப் போட்டியில் இருந்தாவது வெற்றிக் கணக்கைத் தொடருமா என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், ஆப்கன் அணியை அவ்வளவு எளிதாக எடை போட்டுவிட முடியாது. ஸ்காட்லாந்து, நமிபியா அணிகளை அவர்கள் புரட்டி எடுத்திருக்கிறார்கள். அவர்களின் சுழலும் துணிச்சலோடு பெரிய ஷாட்களை ஆடும் திறனும் எதிரணிக்கு பயத்தைக் கொடுப்பது சஜகம்தான்.
ஹஸ்ரத்துல்லா சசாய், விக்கெட் கீப்பர் முகமது சஷாத், நபி, குர்பாஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார். பந்துவீச்சில், டாப் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான், நபி, வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக், நைப் ஆகியோர் மிரட்டுகிறார்கள் .
இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே மீண்டு வெளிவர வேண்டிய சூழல் இருக்கிறது. ரோகித், ராகுல், விராத் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் மேம்பட வேண்டும். இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றிப்பெற்றால் அரை இறுதி வாய்ப்புக்கான லேசான நம்பிக்கை பிறக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.








