தமிழ் சினிமாவில் மைல்கற்களாக அமைந்த படங்கள் உருவானதற்கு பின்னால் பல்வேறு சுவாரஸ்ய கதைகள் இருக்கும். அதுவும் திரையுலக ஜாம்பவான்களின் ஆரம்ப காலகட்டங்களில் வெளிவந்த படங்களின் பின்னணியில் நடந்த சில சம்பவங்களைக் கேள்விப்படும்போது நம்புவதற்கே ஆச்சர்யமாக இருக்கும். அந்த வகையில் ஸ்ரீதர் இயக்கத்தில் ஊஞ்சலாடுகிறது படத்தில் ரஜினி, கமல் ஒப்பந்தமானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையோடு தடம்பதித்த ஜாம்பவான் இயக்குநர்களில் ஒருவர்தான் சி.வி.ஸ்ரீதர். பிரபல இயக்குநர்களையே வியக்க வைத்த இயக்குநராக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் அவர். கல்யாண பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற தமிழ் சினிமா என்னென்றும் மறக்க முடியாத படைப்புகளை இயக்கியவர் ஸ்ரீதர். எம்.ஜி.ஆர். நடித்த உரிமைக்குரல், மீனவ நண்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீதர், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ஊட்டி உரை உறவு உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவை திரையுலகில் அறிமுகப்படுத்திய “வெண்ணிற ஆடை” திரைப்படமும் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவானதுதான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1977ம் ஆண்டு எம்.ஜி.ஆரை வைத்து ஸ்ரீதர் ”அண்ணா நீ என் தெய்வம்” படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அந்த படத்தை நிறுத்திவிட்டு எம்.ஜி.ஆர் முழுநேரமாக தேர்தல் களத்தில் குதித்தார். தேர்தலில் வென்று எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆகி அவர் இனி சினிமாவில் நடிக்கமாட்டார் என்ற நிலை வந்தது. அப்போது சிறிய இடைவெளிக்கு பின் ஸ்ரீதர் மீண்டும் ஒரு படத்தை இயக்குவதற்கு தயாரானார். அந்த படம்தான் ”இளமை ஊஞ்சலாடுகிறது”. ரஜினி, கமல் இணைந்து நடித்த இந்த படம் 1978ம் ஆண்டு ஜூன் 9ந்தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா காவியமாக அமைந்தது. இந்த படத்தில் ரஜினியும், கமலும் ஒப்பந்தம் ஆனதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது. அதை பிற்காலத்தில் ரஜினியை வைத்து பணக்காரன், மன்னன், சந்திரமுகி உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் பி.வாசுவே ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், அவரை வைத்து குணா, மகாநதி உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான சந்தான பாரதியும், பி.வாசுவும் ஆரம்பத்தில் பாரதி வாசு என்கிற பெயரில் படங்களை இயக்கி வந்தனர். 80களில் பெரும் வெற்றிபெற்ற பன்னீர் புஷ்பங்கள் இவர்கள் இணைந்து இயக்கிய படம்தான். இயக்குநர் ஆவதற்கு முன்பு ஸ்ரீதரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றி வந்தனர். மீனவ நண்பன் படத்தை அடுத்து எம்.ஜி.ஆரை வைத்து ஸ்ரீதர் இயக்கிவந்த ”அண்ணா நீ என் தெய்வம்” படம் பாதியிலேயே நின்றதால், அடுத்து ஒரு 6 மாத காலத்திற்கு இருவரும் வேலையில்லாமல் பரிதவித்தனர். அப்போதுதான் ஒரு நாள் ஸ்ரீதரிடமிருந்து இருவருக்கும் அழைப்பு வந்தது. தான் இயக்கவிருக்கும் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்ற இருவரையும் அழைத்துள்ளார் ஸ்ரீதர்.
”இளமை ஊஞ்சலாடுகிறது” இந்த டைட்டிலை கேட்டதுமே உற்சாகமானார்கள் சந்தானபாரதியும், பி.வாசுவும். ஆனால் படத்தில் நடிக்கப்போகும் நட்சத்திரங்களின் பெயர்களைக்கேட்டபோது அந்த உற்சாகம் குறைந்து சோர்வடைந்தார்கள் இருவரும். அந்த நட்சத்திரங்கள் சிறந்த திறமைசாலிகள்தான் என்றாலும், படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல், இப்ப உள்ள டிரென்டிற்கு ஏற்றார் போல் நட்சத்திரத் தேர்வு இல்லையே என்கிற உணர்வு ஏற்பட்டிருக்கிறது அவர்களுக்கு. ரஜினி, கமல் நடிப்பில் 16 வயதினிலே படம் வெளியாகி பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த நேரம் அது. 70’s யூத்துக்களின் ஆதர்ஷ நாயகர்களாக ரஜினியும், கமலும் உருவாகிக்கொண்டிருந்த நேரம் அது. 16 வயதினிலே படம் ஏற்படுத்திய தாக்கத்தில், ரஜினி, கமலால் பெரிதும் கவரப்பட்டிருந்த பி.வாசுவும், சந்தான பாரதியும், மெல்ல மெல்ல தயங்கியபடியே ஸ்ரீதரிடம் சென்று அவர் தேர்வு செய்து வைத்திருந்த இரண்டு ஹீரோக்களுக்கு பதிலாக ரஜினியையும், கமலையும், ஒப்பந்த செய்யலாம் என கூறியிருக்கின்றனர். இதனால் ஆவேசம் அடைந்த ஸ்ரீதர், ”ரஜினி, கமலா யார் அவர்கள்? எனக்கே ஆலோசனை சொல்கிறீர்களா” எனக்கேட்டு இருவரையும் திட்டி அனுப்பியிருக்கிறார்.
இருந்தாலும் மனம் தளராத பி.வாசுவும், சந்தான பாரதியும் ஸ்ரீதரின் மனைவியிடம் சென்று இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ரஜினியையும், கமலையும் நடிக்க வைத்தால்தான் சிறப்பாக இருக்கும், இதை ஸ்ரீதர் சாரிடம் எடுத்துக்கூறுங்கள் எனத் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர். மறுநாள் ஸ்ரீதரின் அலுவலகம் வந்த இருவருக்கும் அந்த மகிழ்ச்சியான செய்தி காத்திருந்தது. அவர்கள் பரிந்துரைத்த ரஜினியையும், கமலையும் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் நடிக்க வைக்க சம்மதித்து விட்டார் ஸ்ரீதர். ரஜினி, கமலுக்கு அப்போது இளைஞர்களிடையே இருந்த பாப்பாலாரிட்டியை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு வியந்த ஸ்ரீதர், தனது முடிவை மாற்றிக்கொண்டு இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இருவரையும் நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சந்தானபாரதி தனது நண்பரான கமலையும், பி.வாசு ரஜினியையும் ஸ்ரீதர் அலுவலகத்திற்கு அழைத்துவந்தனர். அங்கே இளைமை ஊஞ்சலாடுகிறது என்கிற காதல் காவியத்திற்கான அடித்தளம் போடப்பட்டது.
இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு முதலில் தன்னுடன் நீண்ட காலமாக பணியாற்றி வரும் எம்.எஸ்.விஸ்வநாதனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யவே நினைத்துள்ளார் ஸ்ரீதர். அந்த முடிவையும் மாற்ற வைத்துள்ளனர் பி.வாசுவும், சந்தான பாரதியும். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்தால் பொருத்தமாக இருக்கும் என அவர்கள் கூறிய யோசனையை முதலில் மறுத்தாராம் ஸ்ரீதர்.
இளையராஜா திரையுலக இசையில் புதிய டிரென்ட் செட்டராக அப்போது உருவெடுத்து வருவதை கேள்விப்பட்டும், அவரது பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளிகிளியே உள்ளிட்ட பாடல்களை கேட்டு மயங்கியும், தனது முடிவை மாற்றிக்கொண்ட ஸ்ரீதர் இளையராஜாவையே இளமை ஊஞ்சாடுகிறது படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம்பெற்ற ”ஒரே நாள் உனை நான்”, ”கின்னத்தில் தேன் வடித்து” “தண்ணீ கருத்திருக்கு” , ”என்னடி மீனாட்சி” என அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. நவீன காலத்திற்கேற்ற ஸ்ரீதரின் இயக்கம், ரஜினி, கமல் நடிப்பு, இளையராஜாவின் இளமை ததும்பும் இசை ஆகியவை இனைந்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தை வெள்ளிவிழா காவியமாக்கின.