5 ஆண்டுகள் போராடி ஐஆர்சிடிசியிடம் இருந்து 35 ரூபாய் மீட்ட நபர்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் தான் ரத்து செய்த ரயில் டிக்கெட்டுக்கான திரும்ப செலுத்தும் தொகை 35 ரூபாயை கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி  ரயில்வே துறையிடம் இருந்து மீட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் தான் ரத்து செய்த ரயில் டிக்கெட்டுக்கான திரும்ப செலுத்தும் தொகை 35 ரூபாயை கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி  ரயில்வே துறையிடம் இருந்து மீட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் சுஜீத் சுவாமி. பொறியாளரான இவர் கடந்த  2017-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி தனது ஊரில் இருந்து டெல்லி செல்வதற்காக கோல்டன் மெயில் ரயிலில் ஏப்ரல் மாதத்தில் முன்பதிவு செய்தார். 2017 ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து ஜிஎஸ்டி அமலானது. ஆனால், சுஜீத் அதற்கு முன்னதாகவே தனது ரூ. 765 மதிப்புடைய பயணச்சீட்டை ரத்து செய்தார். இதைத்தொடர்ந்து ரூ.100 கழிக்கப்பட்டு ரூ. 665 அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

ரத்து செய்வதற்கான கட்டணம் ரூ.65 மட்டுமே என்பதால் தனக்கு ரூ.100 பிடிக்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திடம் சுஜீத் சுவாமி கேள்வி எழுப்பினார். இதற்கு ரயில்வே அமைச்சகம், சுஜீத்திடம் வசூலிக்கப்பட்ட ரூ.100-இல் ரூ. 65 ரத்துக் கட்டணமாகவும், ரூ. 35 சேவை வரியாகவும் வசூல் செய்யப்பட்டதாக பதிலளித்தது.

தொடர் போராட்டத்துக்குப் பின்னர், ரூ. 35 திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் 2019-ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி அவரது வங்கிக் கணக்கில் ரூ. 33 மட்டும் வரவு வைக்கப்பட்டது. இருப்பினும் மீதித் தொகை ரூ. 2-ஐ பெறுவதற்காக அவர் கடந்த 3 ஆண்டுகளாகத் தனது போராட்டத்தை தொடர்ந்து வந்தார். 5 ஆண்டு போராட்டங்களுக்கு விடையாக கடந்த 27ஆம் தேதியன்று அந்த 2 ரூபாயும் அவருக்கு திருப்பி அளிக்கப்பட்டது.

மேலும், சுஜீத் போன்று தவறுதலாக பிடிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த ரூ. 35 திருப்பி வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2.98 லட்சம் பயணிகளுக்கு ரூ.35 திருப்பி வழங்கப்படவுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2.43 கோடி ஆகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.