சிகரெட் பழக்கத்தில் இருந்து வெளிவந்த பாலிவுட் நடிகர்கள்

சல்மான் கான் உள்பட பாலிவுட் நடிகர்கள் பலர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.  உலக புகையிலை ஒழிப்பு தினமான இன்று, புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான பிரச்சாரம் உலகம் முழுவதும்…

சல்மான் கான் உள்பட பாலிவுட் நடிகர்கள் பலர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். 

உலக புகையிலை ஒழிப்பு தினமான இன்று, புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான பிரச்சாரம் உலகம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகையிலைப் பயன்பாடு காரணமாக புற்றுநோய், நுறையீறல் பாதிப்பு, இதய பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

புகையிலை பயன்பாடு காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகையிலையை அதிக அளவில் உற்பத்தி செய்வதிலும் பயன்படுத்துவதிலும் இந்தியா உலக அளவில் 2ம் இடம் வகிக்கிறது.

இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 29 சதவீதம் பேர் அதாவது 26.7 கோடி பேர் புகையிலையை பயன்படுத்துபவர்களாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குட்கா, கைனி, ஜர்தா, வெற்றிலைப் பாக்குடன் கூடிய புகையிலை, சிகரெட், பீடி, ஹூக்கா என பல விதங்களில் இந்தியாவில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது.

உடல் நலனுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் புகையிலைப் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி, சமூக – பொருளாதார ரீதியிலும் கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், புகைப் பழக்கத்திற்கு நீண்ட காலமாக அடிமையாகி உடல் ரீதியில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட பாலிவுட் நடிகர்கள் பலர் தற்போது அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், செயின் ஸ்மோக்கராக இருந்து வந்துள்ளார். இதனால், உடல் ரீதியில் பல பாதிப்புகளை எதிர்கொண்டதை அடுத்து கடந்த 2020ல் அந்த பழக்கத்தை கைவிட்டுள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ட்விட்டரில் அளித்த பதிலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேபோல், தொடர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த பாலிவுட் பிரபலம் சல்மான் கான், மருத்துவர்களின் அறிவுறையை அடுத்து அந்த பழக்கத்தை கைவிட்டுள்ளார்.

பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே சிகரெட் பழக்கத்திற்கு உள்ளான நடிகர் அர்ஜூன் ராம்பால், கொரோனா பெருந்தொற்று காலத்தில்(2020) அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளார்.

சிகரெட் பழக்கம் காரணமாக 36 வயதிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவ சகிச்சை பெற்று வந்தவர் சையஃப் அலி கான். மருத்துவர்களின் அறிவுறுத்தலை அடுத்து அவர் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளார்.

இதேபோல், புகைப்பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்த நடிகர் விவேக் ஓபெராய், மும்பையில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்று வந்ததை அடுத்து அந்த பழக்கத்தை கைவிட்டுள்ளார்.

இதேபோல் நடிகை கொன்கனா சென்ஷர்மாவுக்கும் புகைப்பழக்கம் இருந்த நிலையில், குழந்தை பிறந்த பிறகு அவர் அந்த பழக்கத்தை கைவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.