சாத்தூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் உள்ள இரும்பு வளையங்களை ஒருவர் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், திருடிய நபர் மற்றும் விற்பனைக்கு வாங்கிய இரும்பு கடைக்காரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ரயில் நிலையத்தின் வடக்கு முனையில் மர்ம நபர் ஒருவர் வெள்ளை நிற பையுடன் ரயில்வே தண்டவாளத்தில் உள்ள ER கிளிப்புகளை சுத்தியலால் அடித்து உடைத்து எடுத்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த காட்சிகளை வைத்து விருதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தில் ER கிளிப்புகளை திருடும் நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சாத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் ER கிளிப்பு திருட்டில்
ஈடுபட்ட நபர் சின்னஒடைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாக்கியம் (59) என்பவர் என தெரிய வந்தது. இதை அடுத்து விருதுநகர் ரயில்வே போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், திருடப்பட்ட ER கிளிப்புகளை சாத்தூர் அருகே உள்ள குருலிங்கபுரத்தில் பழைய இரும்பு கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, விருதுநகர் ரயில்வே போலீசார் அந்த கடையில் சோதனை செய்து ரூபாய் 24,190 மதிப்புள்ள 410 ER கிளிப்புகளை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
-ம. ஶ்ரீ மரகதம்








