ரயில்வே விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் 1 மரத்திற்கு 12 மரங்கள் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பசுமை தாயகம் தரப்பில் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி 144 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை 734 கோடியே 91 லட்ச ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன என்றும், இதற்காக 60 முதல் 100 ஆண்டுகள் பழமையான 600 மரங்கள் வெட்டப்படுவதாக தெரிவித்தார்.
தமிழக அரசின் அனுமதி பெற்றுதான் மரங்கள் வெட்டப்படுகின்றன. நிபந்தனைகள் முழுமையாக பின்பற்றப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட பசுமை குழு உரிய பரிசீலனைகளை செய்தது மரங்களை வெட்ட அனுமதித்துள்ளது. மரக்கன்றுகளை நட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது . 103 மரங்கள் வேறோடு எடுக்கப்பட்டு மாற்று இடத்தில் வைக்கவும், 180 மரங்கள் வெட்டப்படுவதால் அதற்கு மாற்றாக ஒவ்வொரு மரத்திற்கும் தலா 12 மரக்கன்றுகள் வீதம் நடவும் மாவட்ட பசுமைக்குழு விதிகளை வகுத்துள்ளதாக அரசு தெரிவில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா 12 மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் தெற்கு ரயில்வேவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மரக்கன்றுகளை நடுவதிலும், மரங்களை இடமாற்றி வைப்பதிலும் குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை நாட பசுமை தாயகம் அமைப்பிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.







