மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் ஐ.டி ரெய்டு; அரசியல் தலைவர்கள் கண்டனம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரைக்கு சொந்தமான வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரைக்கு சொந்தமான வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. முன்னதாக திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு பயன்படுத்தப்படுகிறது. இந்த போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

இப்படியான அச்சுறுத்தல்களால், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை பணிய வைத்துவிட முடியாது. இந்த நடவடிக்கைகளை தமிழக மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் தேர்தலில் இவர்களுக்கான பாடத்தை புகட்டுவார்கள். திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்று பல ஊடக கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த பின்னணியில்தான் ரெய்டு நடைபெறுகிறது. இந்த போக்கினை கைவிட விசக வலியுறுத்துகிறது.” என்று கூறியுள்ளார்.

முன்னதாக அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.